திமுக ஆட்சி அமைந்தவுடன் மின்வெட்டு என்ற மாயத்தோற்றம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்!!

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில்,சட்டப்பேரவையில் அதுதொடர்பாக  அமைச்சர் செந்தில் பாலாஜி - முன்னாள் அமைச்சர் தங்கமணி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

 திமுக ஆட்சி அமைந்தவுடன் மின்வெட்டு என்ற மாயத்தோற்றம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்!!

சட்டப்பேரவையில் இன்று எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் நிர்வாகத்தில் கோளாறு இருப்பதாக  சாடினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,  திமுக ஆட்சி அமைந்தவுடன் மின்வெட்டு என்ற மாயத்தோற்றத்தை சிலர் உருவாக்கி வருவதாகவும், 2 நாட்கள் மட்டுமே மின்வெட்டு இருந்த நிலையில், அது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். மேலும் எந்த இடத்தில் நிர்வாகம் தவறு செய்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினால் அதற்கு நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருப்பதாகவும்  அமைச்சர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய தங்கமணி, 3 மாதத்திற்கு தேவையான மின்சாரத்தை முன்கூட்டியே வழங்காதது ஏன் கேள்வி எழுப்பியதோடு, அதைத்தான் நிர்வாக கோளாறு என  குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டினார்.

இதற்கு  பதில்  அளித்த செந்தில்பாலாஜி,அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாதது போல் உறுப்பினர் பேசுவது வேடிக்கையபக இருக்கிறது என்றார். மேலும்  கடந்த பத்து ஆண்டு கால அதிமுக ஆட்சி காலத்தில்  எப்போதெல்லாம்  மின்வெட்டு அமல்படுத்தபை்பட்டதை அமைச்சர் பட்டியலிட்டு பதிலடி கொடுத்தார். அப்போது இடைமறித்து பேசிய தங்கமணி, திமுக ஆட்சி என்றாலே மின்வெட்டு, அதிமுக ஆட்சி என்றாலே தடையில்லா மின்சாரம் என்பது தான் நிலை என கூறி அமர்ந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய செந்தில்பாலாஜி, முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் மின் வெட்டு, மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என தெளிவுப்படுத்தினார்.  அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செந்தில்பாலாஜி கூறினார்.