அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் இனி இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது - திருமாவளவன் பேச்சு

அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் இனி இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது - திருமாவளவன் பேச்சு
Published on
Updated on
2 min read

ஜெய்பீம் 2.0 திட்டம்

தமிழ்நாடு முழுவதும் 6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகங்கள் உருவாக்கும் செயல் திட்டம் தொடக்கம். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் மணிவிழா கனவு திட்டம் ஜெய்பீம் 2.0 நிகழ்ச்சி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அம்பேத்கர் படிப்பக சின்னத்தையும் (LOGO), கனவுதிட்டம் ஜெய்பீம் 2.0 திட்ட விளக்கத்தினையும் காணொளி காட்சி மூலமாக திருமாவளவன் தெரியப்படுத்தினார்.


விசிக தலைவர் திருமாவளவன் மேடை பேச்சு

ஊர் தோறும் அம்பேத்கர் படிப்பகம் என்பதை கொள்கை முழக்கமாக விசிக முன்னெடுத்துள்ளது. 1971 க்கு பிறகு இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் தான். நாடாளுமன்றத்தில் தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அம்பேத்கரின் கருத்துக்களை தினசரி மேற்கோள்காட்டி பேசுவார்கள். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உச்சரிக்கப்படும் பெயர் தலைவர் அம்பேத்கரின் பெயர் தான்.

அம்பேத்கர் - காந்தி

அம்பேத்கரை இணைக்காமல், பேசாமல் காந்தியின் வரலாற்றை எழுத முடியாது. அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் இனி இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது என்ற வரலாற்று கட்டாயம் எழுந்துள்ளது. அம்பேத்கரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள் இன்னும் முறையாக தொகுக்கப்பட வேண்டும், வெகு மக்களை சென்றடைய வேண்டும் என்ற செயல் திட்டத்தை உருவாக்கும் வகையில் ஜெய் பீம் 2.0 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொலைநோக்கு பார்வை

தமிழ்நாடு முழுவதும் 6000 கிராமங்களில் அம்பேத்கர் படிப்பகத்திற்காக 450 சதுர அடியில் கான்கிரேட் கட்டடங்களை கட்டவும், அம்பேத்கர் மார்க்ஸ் புத்தகங்களை 10 வயதுக்கு மேற்பட்டோருக்கு படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன்  இந்த ஜெய் பீம் 2.0 கனவு திட்டத்தை தொடங்கி உள்ளோம்.


விசிகவினர் பொறுப்பு

லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட விசிகவில் 6000 நபர்களைக் கொண்டு திட்டத்தை நிறைவேற்றிவிட முடியாதா.
ஜெய்பீம் அறக்கட்டளை மூலம் புத்தகங்களை பதிப்பு செய்யவும், தாய்மண் அறக்கட்டளை மூலம் அம்பேத்கர் படிப்பகங்களை உருவாக்கவும் விசிகவினர் முழு பொறுப்பேற்க வேண்டும்.

50 வயதில் பலன் இல்லை

ஜனநாயகம், சமூகநீதி, தலித்தியம், விடுதலை, அரசியல் குறித்த அனைத்தையும் பத்து வயது முதலே கருத்தியல் ஆளுமை உள்ளவராக மாற்ற வேண்டிய அறிமுகத்தை இச்செயல் திட்டம் மூலம் கொடுக்க வேண்டும். பல்வேறு கருத்துகளை 50 வயதில் கற்றுக் கொள்வதில் பலன் இல்லை. 20 வயதில் கற்று கொள்ள வேண்டும்,10 வயதில் தெரிந்து கொள்ள வேண்டும்

நமத்துப் போன வெடி
ஒரு மனிதனை விழிப்படையச் செய்துவிட்டால் அவனே ஒரு ஆயுதக் கிடங்கு, இல்லையெனில் அவன் ஒரு நமத்துப் போன வெடி. தோழர்கள் முடியும் என நம்பினால் ஒரே ஆண்டில் நம்மால் 6000 அம்பேத்கர் படிப்பகங்களை உருவாக்க முடியும்.

கட்டுவது வெறும் கட்டிடமல்ல

தினசரி என்னைத்தேடி 100 பேர் உதவி கேட்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் கட்சி தோழர்களுக்கு உதவும் எண்ணம் வரவில்லை. கட்சி தோழர்கள் நினைத்தாலே படிப்பகங்களை கட்டி முடிக்க முடியும். ஆனால் மனசு வராது என்றும், கட்டப் போவது வெறும் கட்டிடம் அல்ல அடுத்த தலைமுறையை இணைக்கும் பணி திருமாவளவன் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com