மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து ரூ.12 லட்சம் மோசடி...கணவரை கைது செய்த போலீஸ்

மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து திருமண ஆசை காட்டி ரூ 12 லட்சம் மோசடி செய்த கார் டிரைவரை ஈரோட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்

மனைவியை நண்பனின் காதலியாக நடிக்க வைத்து ரூ.12 லட்சம் மோசடி...கணவரை கைது செய்த போலீஸ்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி வயது. இவர் வாடகை கார் வைத்து தொழில் நடத்தி வருகிறார். பாலாஜியின் நண்பரான ஈரோடு கொல்லம் பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரும் கார் டிரைவர் தான்.

இவரது மனைவி நித்யா, இவர்களது திருமணம் கடந்த 2018-ம் ஆண்டு நடந்தது. இந்த திருமணத்திற்கு ராஜா தனது நண்பரான பாலாஜியை அழைத்து இருந்தார். திருமணத்திற்கு வந்த  பாலாஜியிடம், என் திருமணத்துக்கு வந்த சத்யா என்ற இளம்பெண் உன்னை பிடித்து இருப்பதாக கூறுகிறார்.

அவர் உன்னிடம் செல்போனில் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார் என்று கூறினார் இதைத்தொடர்ந்து சத்யாவின் செல்போனுக்கு பாலாஜி தொடர்பு கொண்டு பேசியுள்ளார் அவர் நன்கு பழகி பேசிய பிறகு இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

ஒரு கட்டத்தில் சத்தியா புனேவில் மருத்துவ படிப்பு படித்து கொண்டு இருப்பதாகவும் தனது படிப்பு செலவுக்கு பணம் கொடுக்குமாறு பாலாஜி இடம் கேட்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த பாலாஜி, சத்யா கேட்கும் பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.

பல மாதங்களாக சத்தியாவிற்கு (நித்தியா) ஆயிரக்கணக்கில் பாலாஜியின் பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. போனில் மட்டுமே பேசி வந்த சத்தியா மீது, பாலாஜிக்கு சந்தேகம் ஏற்படவே , அது குறித்து பாலாஜி விசாரித்துள்ளார்.

அப்போது சத்யா என்ற ஒரு இளம் பெண் கிடையாது என்றும் இத்தனை நாட்கள் தன்னிடம் பேசி வந்தது தனது நண்பர் ராஜாவின் மனைவி நித்யா என்பது பாலாஜிக்கு தெரியவந்தது.

இதுகுறித்து பாலாஜி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலாஜிக்கு வரன் தேடுவதை அறிந்த ராஜாவும் நித்யாவும் பணம் பறிக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு ஏமாற்றி ரூ.12 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து ராஜா, நித்யா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது . அதனை தொடர்ந்து போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.