6-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்... 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு ஏற்பாடு...

தமிழகத்தில் 6வது கட்டமாக இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் ஆயிரத்து 600 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

6-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்... 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு ஏற்பாடு...

தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் லட்சக் கணக்கானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 17ம் தேதி நடைபெறவிருந்த 6வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற மருத்துவ முகாம்களை விட அதிகமாக 50 ஆயிரம் இடங்களில் 6வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.  

இதேபோல் சென்னையிலும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியன்று சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 865 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். சென்னையில் 20ம் தேதி வரை அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 71 லட்சத்து 19 ஆயிரத்து 870 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் இன்று ஆயிரத்து 600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 6வது தீவிர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.