முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி...!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோருக்கு எதிரான ஊழல் முறைகேடு வழக்கை நடத்த ஒப்புதல் அளித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மசோதாக்கள் நிலுவை விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்த்த தமிழ்நாடு அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவரது தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.

அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி வழங்கக் கோரிய மசோதாவுக்கு, கடந்த 13ம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான மசோதா நிலுவையில் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனைக் கைதிகள் 580 பேரை முன்விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாவில் 165 பேரின் மனு நிராகரிக்கப்பட்டதாகவும், 362 பேரை முன்விடுதலை செய்ய ஒப்புதல் அளித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருகிறார் - நீதிபதி சரமாரி கேள்வி!

பேராசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரிடம் விசாரணை நடத்த, கடந்த 18ம் தேதி ஆளுநர் அனுமதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டி.என்.பி.எஸ்.சி தவிர எஞ்சிய அரசு பதவி நியமன கோப்புகளுக்கு அனுமதி அளித்து விட்டதாக ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

2021 நவம்பர் முதல் 2023 மே 20ம் தேதி வரை அனுப்பப்பட்ட துணைவேந்தர் நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மே 29ம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர் நியமனம் நடைபெறவில்லை என உறுதியாகியுள்ளது.