ஜல்லிக்கட்டுக்கு அனுமதி "தமிழர்களுக்கும்,தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி" கனிமொழி

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி "தமிழர்களுக்கும்,தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி" கனிமொழி

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது தமிழர்களுக்கும்,தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர்‌ அரங்கில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொன் விழா  ஆண்டையொட்டி 25வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, டி.கே.எஸ் இளங்கோவன், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அப்போது மேடையில் பேசிய கனிமொழி "தொழிலாளர்களுடைய நலனுக்காக முதல்முறையாக போராடிய இயக்கம் நம்முடைய இயக்கம். ஜமீன்தார் ஒழிப்பு மாநாடு தொடங்கி பல்வேறு தொழிலாளர்களுடைய நலனுக்காகவும் உரிமைக்காவும் போராட்டக்களத்தில் நின்றவர்கள் நம் கழகத்தைச் சேர்ந்தவர்கள். தொழிலாளர்களுடைய போராட்டத்தை ஏற்று தொழிலாளர்களுக்கு ஆதரவாக சட்டத்தை மாற்றிய அரசு தி.மு.க அரசு" எனக் கூறினார். 

மேலும், தன்னுடைய ஆட்சியிலேயே தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை மதித்து சட்டத்தை மாற்றக் கூடிய அரசு தி.மு.க அரசுதான் எனவும்  தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கின்ற எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதற்காக எல்லா போராட்டங்களையும் ஏற்றுக் கொண்டதும்  தி.மு.க அரசுதான் எனவும்  கூறினார். தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது தமிழர்களுக்கும்,தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.