பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அதிரடி கைது... பாரத மாதா, தலைவர்களை விமர்சித்து தேடப்பட்டவர்...

இந்துமத கடவுள்களையும், தலைவர்கள் குறித்து விமர்சித்து பேசிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அதிரடி கைது... பாரத மாதா, தலைவர்களை விமர்சித்து தேடப்பட்டவர்...
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, திமுக வெற்றி பெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்று சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார்.
 
மேலும், பாரத மாதா குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் பல தமிழக அமைச்சர்கள் குறித்தும் இழிவாக பேசியுள்ளார். இதுகுறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதனையடுத்து மதுரை அருமனையில் போலீசில் 30 பேர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது புகாரளித்தனர்.
 
உடனடியாக இது தொடர்பாக சட்ட விரோதமாக கூடுதல், ஜாதி, மதம் மற்றும் இரு தரப்பினர் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கை குறித்து  அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், 5 தனிப்படைகள் அமைத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று மதுரை கள்ளிக்குடியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அதிரடியாக கைது செய்யப்பட்டு கன்னியாகுமரி அருமனை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.