தமிழ்நாட்டில் களைகட்டும் பங்குனி உத்திர பெருவிழா தேரோட்டம்...!

தமிழ்நாட்டில் களைகட்டும் பங்குனி உத்திர பெருவிழா தேரோட்டம்...!

பங்குனி உத்திர பெருவிழாவை ஒட்டி, தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில்  பிரசித்தி பெற்ற சிவசுப்ரமணியர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 27- ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, திருத் தேரோட்டம் நடைபெற்ற நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். 

இதையும் படிக்க : பா. ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பை டென்னிஸ் போட்டி: 'BENZ' காரை தட்டி செல்லப்போவது யார்?

இதேபோன்று,  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர விழாவை ஒட்டி, ஏராளமான முருக பக்தர்கள் காவடிகளை சுமந்து ஊர்வலம் வந்தனர். கம்பத்து இளைஞர் சன்னதியில் இருந்து, பால், பன்னீர், புஷ்பம் என 375 காவடிகளை சுமந்தபடி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, முருகனை வழிபட்டனர். தொடந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர தோரோட்டத்தை முன்னிட்டு, ஏராளமான முருக பக்தர்கள் பால், புனித நீர் உள்ளிட்டவை சுமந்தும், காவடிகளை சுமந்தும் ஊர்வலமாக வந்தனர். அத்துடன், பாரம்பரிய நடனம் ஆடியும், சாட்டையால் அடித்து, நேர்த்திக்கடன் செலுத்தியும் உற்சாகத்துடன் கொண்டாடினர். இதில் ஏராளமான பக்தர்கள் சாரை, சாரையாக வந்து கலந்து கொண்டனர்.