”48 மணி நேரம்”.. காற்றழுத்த தாழ்வுப்பகுதி  உருவாகக் கூடும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி  உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

”48 மணி நேரம்”.. காற்றழுத்த தாழ்வுப்பகுதி  உருவாகக் கூடும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

மன்னார் வளைகுடா மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை, தென் கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில், தமிழகம் மற்றும் புதுவையிலும், 10ஆம் தேதி தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில், மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.