அரசின் போர்கால நடவடிக்கையால் தொற்று குறைந்து வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசின் போர்கால நடவடிக்கையால் தொற்று குறைந்து வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கையினால் தமிழகத்தில் கொரேனா பாதிப்பு  குறைந்து வருவதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டவும், உற்சாகப்படுத்தவுமே பாதுகாப்பு கவச உடை அணிந்து, கொரோனா வார்டுக்குள் சென்றதாக கூறினார். தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு  குறைந்து வருவதாக கூறிய முதலமைச்சர்,  தளர்வுகள் இல்லாத ஊரடங்கே கொரோனா பரவல் குறைந்ததற்கு காரணம் என்றார். 

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த முதலமைச்சர், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளதாகவும்  பட்டியலிட்டார். 

அடுத்தடுத்து கொரோனா அலைகள் வரும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதனையும் சமாளிக்க தமிழக அரசு தயாராகி வருவதாகவும், பொதுமக்கள் ஒத்துழைத்தால் கொரோனா மட்டுமல்ல எந்த நோயையும் வெல்லலாம் எனக்கூறினார். மேலும், செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது மத்திய அரசே நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.