அடுத்த ஐந்து நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மழை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்த  ஐந்து நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  மழை எச்சரிக்கை

இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் வரும் 2 ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், வரும் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு   இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.