சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்க எதிர்ப்பு: தரையில் உருண்டு புரண்ட போராட்டம் நடத்திய நபர்...

புதுக்கோட்டையில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தரையில் உருண்டு புரண்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்க எதிர்ப்பு: தரையில் உருண்டு புரண்ட போராட்டம் நடத்திய நபர்...

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள லேணா விளக்கில், கடந்த சில தினங்களாக 8க்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சார்பில், அந்தப் பகுதியில் 4 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்காணிப்பு கேமரா பதிவு அறை மற்றும் காவலர் பாதுகாப்பு அறை கட்டும் பணி நேற்று தொடங்கியது.

அப்போது, அருகில் ஆவின் பால் கொள்முதல் மையம் வைத்திருக்கும் பழனியப்பன் என்பவர், கண்காணிப்பு கேமரா பதிவு அறை கட்டக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, நமணசமுத்திரம் காவல்துறையினர் மற்றும் அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர், தேக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர், பழனியப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் சிசிடிவி அறை கட்டும் இடத்தில், பழனியப்பன் தரையில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 

இந்த நிலையில், அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஆவின் மையம் வைப்பதற்காக, பழனியப்பனுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, அந்த இடத்தை காலி செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு கேமரா அறை அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெறும் எனவும், அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.