நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து இன்று அறிவிக்க வாய்ப்பு.!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று அல்லது 24ம் தேதி அறிவிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து இன்று அறிவிக்க வாய்ப்பு.!!

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, 2019ஆம் ஆண்டில் நடைபெற்றது.

அப்போது, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, விடுபட்ட 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இதில், பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியது. ஆனால், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், வரும் 31ஆம் தேதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு வரும் 24ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தும் பணியை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமுகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டது.

இதில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் மாநில தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு இன்று அல்லது வரும் 24ஆம் தேதியன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.