மொழிக்கு மட்டும்தான் அன்பால் இணைக்கக்கூடிய ஆற்றல் உண்டு.. முதலமைச்சர் பெருமிதம்..!

தமிழ் மொழியைக் கற்பிக்கும் தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடக்க விழா நடைபெற்றது..!

மொழிக்கு மட்டும்தான் அன்பால் இணைக்கக்கூடிய ஆற்றல் உண்டு.. முதலமைச்சர் பெருமிதம்..!

தமிழ்ப் பரப்புரைக் கழக தொடக்கவிழா:

வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடக்க விழா சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் நடைபெற்றது. 

முதலமைச்சர் பங்கேற்பு:

இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை தொடங்கி வைத்தார். மேலும், இந்த திட்டத்தின் கீழ் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடப்புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

தமிழ் நம் உயிர்:

இதனை தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”தமிழ் வெறும் மொழியல்ல, அது நம் உயிர் என்றும் தமிழை தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இருக்காது” என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை தொடங்கி வைப்பதை பெருமையாக கருதுவதாகவும் கூறினார்.

தமிழால் இணைந்துள்ளோம்:

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ”உணர்வால், உள்ளத்தால், தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளதாகவும், மொழிக்கு மட்டும்தான் இத்தகையை அன்பால் இணைக்கக்கூடிய ஆற்றல் உண்டு” என்றும் தெரிவித்தார். 

அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு:

இவ்விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, ராமச்சந்திரன், மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பலர் இணையம் மூலமாகவும், நேரடியாகவும் கலந்து கொண்டனர்.