தமிழகத்திலும் நுழைந்ததா ஒமிக்ரான்... சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு அறிகுறி...

சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திலும் நுழைந்ததா ஒமிக்ரான்... சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு அறிகுறி...

தென் ஆப்ரிக்காவில் பரவ தொடங்கிய  ஒமிக்ரான் வகை கொரோனா உலக நாடுகளுக்கு வேகமாக தாவி வருகிறது. சுமார் 50-க்கும்  மேற்பட்ட பிறழ்வுகளை கொண்ட இந்த வகை வைரஸ், டெல்டாவை விட கொடியது என உலக சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது. இதுதவிர ஒமிக்ரானின் தீவிரம் குறித்து தற்போது வரை எவ்வித தகவலும் வெளிவராததால், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரித்துள்ள நிலையில் 30 நாடுகளில் கிட்டதட்ட 375 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முதன்முறையாக கர்நாடகா மாநிலம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளை சோதித்து பார்த்ததில் ஒருவருக்கு புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

134 பயணிகளுக்கு ஆர். டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்து பார்த்ததில் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்த நபர் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த திருச்சி சுகாதாரத்துறை இணை இயக்குனர், சம்பந்தப்பட்ட பயணிக்கு ஒமிக்ரான் வகை தொற்றின் அறிகுறி மட்டுமே இருப்பதாகவும், அவரது மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.