காதல் மனைவியை கேவலப்படுத்திய கணவன்..! 36 ஆண்டுகள் போராடி வெற்றிபெற்ற மூதாட்டி..!

காதல் கணவனால் கைவிடப்பட்டு நிற்கதியாய் நின்ற பெண்மணி, 36 ஆண்டுகளாகப் போராடி தன்னுடைய குழந்தையின் தந்தை இவன் தான் என நிரூபித்துக் காட்டியுள்ளார். 35 ஆண்டுகால உரிமைப் போராட்டம், 10 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, தனக்கு துரோகம் செய்த காதல் கணவன் மீது வழக்குப்பதிய வைத்துள்ளார் 65 வயது மூதாட்டி இளவரசி.

காதல் மனைவியை கேவலப்படுத்திய கணவன்..! 36 ஆண்டுகள் போராடி வெற்றிபெற்ற மூதாட்டி..!
சென்னையைச் சேர்ந்த இளவரசி கடந்த 1975ஆம் ஆண்டு, தன்னுடன் படித்த விஜய கோபாலன் என்பவரை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி பெங்களூருவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் சென்னையில்  சுமார் 7 மாத காலம் வசித்து வந்துள்ளனர், விஜய கோபாலன் - இளவரசி தம்பதியினர். 
 
ஒரு கட்டத்தில் பணி நிமித்தமாக ஹைதராபாத்  செல்வதாகக் கூறிச்சென்றுள்ளார் விஜய கோபாலன். கணவன் மீண்டும் வருவான் என வயிற்றில் குழந்தையுடன் நம்பி நம்பி காலத்தை கடத்தியுள்ளார் இளவரசி. இதற்கிடையில் இளவரசிக்கு தேவி என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால், இரு வீட்டாரின் ஆதரவும், கணவனின் அரவணைப்பும் இன்றி நிற்கதியாய் நின்றுள்ளார், இளவரசி. 
 
ஆண்டுகள் பல கடந்தும் திரும்பி வராத கணவனை தொடர்ந்து தேடி வந்த நிலையில், கடந்த 1985ஆம் ஆண்டு இளவரசியின் கணவன் விஜயகோபாலன் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.  மகிழ்ச்சியில் கணவனைக் காண குழந்தையுடன் சென்ற இளவரசிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. விஜய கோபாலன் வேறொரு திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தது இளவரசியின் தலையில் பேரிடியாய் விழுந்தது. செய்வதறியாது நின்ற இளவரசி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
விசாரணையின் போது இளவரசியின் நடத்தையை தவறாகப் பேசிய விஜயகோபாலன், தேவி தனது குழந்தையில்லை என அவதூறாகப் பேசியதோடு, டி.என். ஏ பரிசோதனை மூலம் தன் குழந்தை என நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார். இதையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு சட்டப்போராட்டத்தை தொடர்ந்த இளவரசிக்கு 2020ஆம் ஆண்டில் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுமதி கிடைத்தது. இதனடிப்படையில் நடைபெற்ற சோதனையில் இளவரசியின் குழந்தைக்கு விஜய கோபாலன் தான் தந்தை என்று தெரியவந்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. 10 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பின் வெற்றி கண்டார் இளவரசி.
 
இந்நிலையில் தனது நடத்தை குறித்து அவதூறாக பேசிய விஜய கோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தலைமைச் செயலக  காவல் நிலையத்தில் மீண்டும்  புகார் அளித்தார் இளவரசி. இதன்பேரில் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் விஜய கோபாலன் மீது 2 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். 
 
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற சொற்றொடருக்குச் சான்றாக 36 ஆண்டுகளுக்குப் பின் தனது கணவன் மீது சட்ட நடவடிக்கை வேண்டி இளவரசி அளித்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.