ஓலா கார் ஓட்டுநர் கழுத்து அறுத்துக்கொலை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டம்!

சென்னை அடுத்த பல்லாவரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓலா கார் ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஓலா கார் ஓட்டுநர் கழுத்து அறுத்துக்கொலை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டம்!

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவர், ஓலா நிறுவனத்தில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர், 2 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டுக்கு சவாரி சென்றபோது, மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.  இதுதொடர்பாக ஒரு சிலரை கைது செய்து, செங்கல்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கார் ஓட்டுனர் அர்ஜூனன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, ஓலா நிறுவனத்தில் வேலை செய்யும் 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், பல்லாவரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஓலா நிறுவனத்தில் வேலை செய்யும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், ஓலா நிறுவனம் தங்களுக்கு உரிய காப்பீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லாவரம் போலீசார், போராட்டக்காரர்களை கலைந்து போக சொன்னதால், வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, உயிரிழந்த கார் ஓட்டுநர் அர்ஜூனன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கொலை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்ற 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், ஆட்சியர் ராகுல்நாத்திடம் மனு அளித்தனர். முன்னதாக, மனு அளிக்க வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.