கர்நாடகாவின் முடிவால் தமிழ்நாடு பாலைவனமாகும்... எடியூரப்பாவுக்கு ஓபிஎஸ் கண்டனம்...

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க  சட்டப்பூர்வமான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவின் முடிவால் தமிழ்நாடு பாலைவனமாகும்... எடியூரப்பாவுக்கு ஓபிஎஸ் கண்டனம்...
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு  அணை கட்டுவதை தடுக்க சட்டப்பூர்வமான நடவடிக்கையை  எடுக்க வேண்டுமென  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்  வலியுறுத்தி யுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் அறிவித்து இருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் கர்நாடகா எடுக்ககூடாது என்றும், கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உரிய அறிவுரையை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  
 
மேலும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் மேகதாதுவில் அணைகட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்பு தமிழக மக்களையும், விவசாய மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அணை கட்டப்பட்டால் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்றும், தமிழகம் பாலைவனமாகும் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.
 
மேலும்  அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கர்நாடக முதலமைச்சர் கூறி வருவதற்கு அதிமுக கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ள ஓபிஎஸ்,  மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  உள்ளார்.