பேனா வைப்பதை எதிர்க்கவில்லை...கடலில் வைப்பதையே எதிர்கிறோம்...கருத்துக் கேட்பு கூட்டத்தில் சலசலப்பு!

பேனா வைப்பதை எதிர்க்கவில்லை...கடலில் வைப்பதையே எதிர்கிறோம்...கருத்துக் கேட்பு கூட்டத்தில் சலசலப்பு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பதை எதிர்க்கவில்லை, கடலில் வைப்பதை தான் எதிர்கிறோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம் வைப்பது குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது நாம் தமிழர் கட்சி சார்பாக கருத்து கூட்டத்தில் உரையாற்றிய சீமான், கடலில் பேனா சிலை வைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதால் அதற்கு அனுமதி தரக்கூடாது எனவும், கடல்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் எனவும், கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால், அந்த நினைவுச் சின்னத்தை உடைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பேனா சிலையை வேறு எங்காவது வைக்க நாம்தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவிக்க வில்லை எனவும் தெரிவித்த அவர், கடலில் வைத்தால் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து அதனை தடுப்போம் எனவும் எச்சரித்தார்.

இதையும் படிக்க : ஈபிஎஸ் எடுத்துள்ள புதுவியூகம்...வீடு வீடாக...ஆர்.பி.உதயகுமார் சொன்ன தகவல்...!

சீமான் மேடையில் உரையாற்றிய போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் அங்கு சலசலப்பு நிலவியது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பேனா சிலையை நிறுவுவது தொடர்பான கூட்டத்தில் கருத்து தெரிவிக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டனத்திற்கு உரியது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளி மேம்பாட்டிற்கு பொதுமக்களிடம் நிதி கேட்கும் அரசிற்கு பேனா சிலை வைக்க 81 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பினார்.