”அணை கட்டுவதற்கு தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்...இரு மாநிலங்களுக்கிடையே மோதல் உருவாகும்” பிரேமலதா எச்சரிக்கை!

”அணை கட்டுவதற்கு தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்...இரு மாநிலங்களுக்கிடையே மோதல் உருவாகும்” பிரேமலதா எச்சரிக்கை!

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழர்கள் யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

குலதெய்வ வழிபாட்டிற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், மல்யுத்த வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தியாவிற்காக விளையாடிய பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை, அவர்கள் துறைசார்ந்தவர்களாலே பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளது கண்டிக்கத்தக்கது.  தொடர்ந்து போராடி வரும் வீராங்கனைகளுக்கு நல்ல ஒரு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழர்கள் யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும், இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் உருவாகும் என தெரிவித்தார்.

வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு வருவதற்கு முன்பு அறிவிக்கமாட்டார்கள், இருப்பினும் தங்களது கடமையை செய்த அதிகாரிகளை தாக்கியது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். எனவே, இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்றும், இது அதிகாரிகளை கடமை செய்ய விடாமல் தடுப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : சிலிண்டர் விலை குறைவு...இருப்பினும் அதிருப்தியில் இல்லத்தரசிகள்!

செங்கோல் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக செங்கோல் உள்ளது. இதற்கு முன் செங்கோல் எங்கு இருந்தது.? செங்கோல் விவகாரம் ஒட்டுமொத்த தமிழர்களின் புகழ் போற்றப்பட வேண்டும் அதை ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் நிறைவு பெற்றது குறித்த கேள்விக்கு, முதலமைச்சரின் துபாய் பணத்தின் போது எத்தனை தொழிற்சாலைகள் எத்தனை முதலீடுகள் கொண்டு வந்தார்? எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுத்தார்? நேற்று இரவு தான் தமிழகம் திரும்பி உள்ளார் அதற்குள் பயணம் வெற்றி பெற்றுவிட்டது என கூறுகிறார். ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார். பொறுத்திருந்து பார்ப்போம் தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில், தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள் வழங்குகிறார் என்பதை பார்ப்போம் என்று கூறியுள்ளார்.