தருமபுரியில் தி.மு.க. 'வீக்' என இனி யாரும் கூறமுடியாது.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு...

தருமபுரியில் திமுக வலுவாக இல்லை என்று இனி யாரும் கூறமுடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

தருமபுரியில் தி.மு.க. 'வீக்' என இனி யாரும் கூறமுடியாது.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு...

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் இரண்டாயிரம் பேர்  தி.மு.க.வில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் வகித்தார். நிகழ்ச்சியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உட்பட பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று பேசிய முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,

பழனியப்பன் அவர்கள் இங்கு உரையாற்றுகிறபோது தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். கொஞ்சம் லேட்டாக வந்தார் அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய வசனம் ஒன்று உங்களுக்குத் தெரியும். சட்டமன்றத்தில் கடந்த அதிமுக-வின் அமைச்சரவையில், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அந்த அமைச்சரவை வரிசையில் உட்கார்ந்திருக்கும்போது நான் அவரை உன்னிப்பாக உற்றுக் கவனிப்பது உண்டு. பெரும்பாலும் சில அதிமுக அமைச்சர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களுக்குக் கோபம் வர வேண்டும், வெறுப்பு வர வேண்டும் அதனால் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசுவது வழக்கம். ஆனால் ஒரு நான்கைந்து பேர் எந்தப் பிரச்சினைக்கும் வரமாட்டார்கள்.

அரசினுடைய திட்டங்கள், மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள், மக்களுக்குச் சொல்ல வேண்டிய செய்திகள், சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் - அதை மட்டும் பேசி மற்ற எந்தப் பிரச்சனையும் உருவாக்காத அமைச்சர்கள் இருந்தார்கள். அதை நான் இல்லை என்று மறுக்கவில்லை. அதில் முதல் ஆள் யார் என்றால், பழனியப்பன் அவர்கள்தான். அப்போது அமைச்சர்களுடைய பதிலுரை வருகின்றபோது, நாங்கள் பாதியில் எழுந்தும் சென்றிருக்கிறோம். ஏனென்றால் அந்த அளவிற்கு மோசமாகத் தரம் தாழ்ந்து பேசுவார்கள்.

அவ்வாறு பேசினால், பதில் சொல்வதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதுவும் கொடுக்க மாட்டார்கள். அதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டிய சூழ்நிலை பல நேரங்களில் ஏற்பட்டதுண்டு. ஆனால் பழனியப்பன் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அவர் பதில் சொல்கிறார் என்றால் முழுமையாக இருந்து கேட்டவர்கள் நாங்கள். அதுதான் உண்மை. அவர் வந்து கட்சியில் சேர்ந்தபோது, அவர் இங்கு உங்களிடத்தில் சொன்னார். பண்போடு, ஜனநாயக முறைப்படி, அவர் ஆற்றுகிற அந்தப் பணிகளை கண்டு நான் வியந்ததுண்டு. 

நான் மட்டுமல்ல, எங்களிடத்தில் இருக்கும் கட்சி முன்னோடிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இதைப் பேசுவது உண்டு. என்னுடைய வேண்டுகோளை ஏற்று, என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல, தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற நம்முடைய கழகத் தோழர்களின் வேண்டுகோளையும் ஏற்று இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்திருக்கிறார். அவ்வாறு சேர்ந்தது அவர் மட்டுமல்ல, அவரை நம்பி, அவரிடத்தில் எவ்வாறு விசுவாசமாக, அவரோடு இணைந்து பணியாற்றிக் இருக்கிறீர்களோ, “அதே விசுவாசத்தோடு நாங்களும் வருகிறோம், அவரோடு சேர்ந்து பணியாற்ற நாங்களும் காத்திருக்கிறோம்” என்ற உணர்வோடு, இங்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள்.  அவ்வாறு வந்திருக்கின்ற அவரை மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து உங்களையும் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் வருக… வருக… வருக… என வரவேற்கிறேன். 

தர்மபுரி மாவட்டம் “வீக் வீக்” என்பார்கள். இனிமேல் தர்மபுரி மாவட்டத்தை யாரும் வீக் என்று சொல்லக்கூடாது. இனிமேல் யாரும் அவ்வாறு சொல்லவும் மாட்டார்கள்; அவ்வாறு சொல்லவும் முடியாது. ஏனென்றால் இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. எனவே அந்த மாறி இருக்கும் நிலைமையை நீங்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். 

அதன்பின் செய்தியாளரிடம் பேசிய பழனியப்பன் :-

ஜூலை மாதம் திமுகவில் இணைய நான் நினைந்தேன் அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் சுமார் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் பாமக, தேமுதிக, அதிமுக ஆகிய மாற்றுக் கட்சிகளில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்து உள்ளனர் அதில் ஒரு பகுதியாக இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்து உள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலிருந்து 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர், இதில் அதிமுக, பாமக, தேமுதிக, விசிக உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் உள்ளதாக கூறினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்கு  வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை விரட்டி அடித்த சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள், ஜனநாயகத்தை மீறி அது போன்று செயல்பாடுகளில் தான் ஈடுபடுவார்கள் எனவும் அதை மக்களே புரிந்து கொண்டதால் தான் திமுகவை வெற்றி பெற செய்துள்ளதாகவும்,  அதிமுகவில் ஜனநாயகமும் இல்லை நல்ல ஆளுமை மிக்க தலைவரும் இல்லை எனவும் அதுவே பொது மக்களின் கருத்தாக இருப்பதாகவும் என்று அவர் கூறினார்.