பெற்ற குழந்தையை விற்ற தாய்... வந்தவாசியில் 9 பேர் கைது...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், தகாத உறவில் பிறந்த குழந்தையை விற்றதாக தாய் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த நபரின் உடலை எடுத்து செல்ல விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர் அடுத்த ஆரூற்றுபாறை கிராமத்தை சேர்ந்த ஆனந்த் தேநீர் கடை நடத்தி வந்தார். காலையில் கடையை திறக்க வந்தபோது அவரை காட்டுயானை தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தொடர்ந்து அங்கு குவிந்த மக்கள் சடலத்தை எடுத்து செல்லவிடாமல் போராட்டம் நடத்தினர்.
அப்போது 5 வருடங்களாக இப்பகுதியில் சுற்றி திரியும் இந்த ஒற்றை யானை இதுவரை 10க்கும் மேற்பட்டோரை தாக்கி கொன்றுள்ளதாகவும், இதுத்தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு, மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பெற முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியாவில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதில், தி.மு.க எம்.பிக்களான டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக எம். பிக்களான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவும் நீண்ட இழுபறிக்கு பிறகு 2 வேட்பாளர்களின் விவரங்களை வெளியிடடுள்ளது. இதனிடையே, வேட்பு மனு தாக்கலானது கடந்த 24ஆம் தேதி தொடங்கிய நிலையில், வேட்பு மனுக்கள் 31ஆம் தேதி தேதி வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அந்த ஒரு சீட்டை பெறுவதற்கு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கென இருவரும் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் தலைமையை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள HECS கார்ப்பரேட் அலுவலகத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார்.
அத்துடன் வல்லம் - வடகல் சிப்காட்டில் உற்பத்தி அலகுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் யு.எஸ் கன்சொலேட்டின் பொருளாதார நிபுணர் டஸ்டின் பிக்கல் கலந்து கொண்டு காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்,
தமிழகத்தில் 10 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டத்தில் உள்ள ஆலைகளில் இருந்து சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது என்றும், தண்ணீரில் கழிவுகளை கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பதற்கு சமம். சாயப்பட்டறை கழிவுநீரை கலந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த கேள்விக்கு, தற்போது முன்பை விட 20% பிளாஸ்டிக் பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்து உள்ளதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு பிளாஸ்டிக் வருவதாகவும், பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக 174 க்கும் மேற்பட்ட கம்பெனிகளை மூடியுள்ளதாகவும், இனி அது போன்ற நிறுவனங்கள் இருந்தால் சொல்லுங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.
பிளாஸ்டிக்கை ஒழிக்க, முதல்வர் அறிமுகப்படுத்திய மஞ்சப்பை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார். அத்துடன் பயோ பிளாஸ்டிக் குறைந்த நாட்களில் / 16 நாட்களில் மக்குவதாக விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்துள்ள செய்தியை காண முடிந்ததாகவும், இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். அதற்கான தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் அதனை முழுவதுமாக செயல்படுத்துவதிலும் சிக்கல் இருப்பதாகவும், அத்துடன் விவசாயம் சார்ந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மக்ககூடியது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வரும் ஜூலை மாதத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட உள்ளதால் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், 200 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் போட்டியாளர்கள் மாமல்லபுரத்தில் நடக்கிறது என்றும், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதாக, அவருக்கு தனது வாழ்த்துக்களையும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கிராமப்புற மாணவர்கள் சிறப்பாக விளையாட மாவட்ட அளவில் கல்வித்துறை மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டிகளை காண பள்ளி கல்வி துறை அமைச்சரும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 100 ரூபாய்க்கு குறைந்த அளவு பெட்ரோல் போட்டதாக கூறி பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சிதம்பரம் கஞ்சித்தொட்டி பேருந்து நிலையம் எதிரே இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டார். அப்போது, பெட்ரோல் குறைவாக உள்ளதை அறிந்த வாடிக்கையாளர் வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து தருமாறு ஊழியரிடம் கேட்டார்.
தொடர்ந்து குழாய் மூலம் பெட்ரோலை எடுத்து பார்த்தபோது, அதில் 30 ரூபாய் அளவிற்கு மட்டுமே பெட்ரோல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 ஜோடிகளுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 33 வகையான இலவச சீர்வரிசைப் பொருட்களை மணமக்களுக்கு வழங்கினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு திமுக சார்பில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மணமக்களுக்கு மாலை மற்றும் தாலி எடுத்து கொடுத்து மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார்.
9 ஜோடிகளுக்கும் அவர்களது சமூக முறைக்கு ஏற்ப குடும்பத்தினர் கேட்டுக் கொண்டபடி தாலிச்சரடுகள் இடம்பெற்றிருந்தன. குத்துவிளக்கு மற்றும் 33 வகையான சீர்வரிசைப் பொருட்கள் முதலமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது. 8 கிராம் தங்கத்தாலி, பீரோ, கட்டில், பூஜை பொருட்கள், மிக்சி, மெத்தை, எரிவாயு அடுப்பு உள்ளிட்ட 33 33 சீதன பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொடுக்கப்பட்டது.
திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
நான் முதல் முறை கொளத்தூர் சட்ட மன்ற உறுப்பினராகி ஆய்வு நடத்தியபோது இந்த மண்டபம் சமூக விரோதிகளால் பாழடைந்து கிடந்தது. காமராசரால் 1966 ம் ஆண்டு இந்த மண்டபம் திறக்கப்பட்டது. நான் இந்த மண்டபத்தை சீர் செய்ய கூடாது என அரசியல் காழ்ப்புணர்வால் சிலர் வழக்கு தொடர்ந்தனர். கழக வழக்கறிஞர்கள் மூலம் தீர்ப்பு பெற்று குளிர்சாதனம், லிப்ட், பார்க்கிங் வசதியுடன் முழுமையாக மண்டபத்தை கட்டி முடித்துள்ளோம். 700 பேர் வரை மண்டபத்தில் அமர முடியும் என்றார். சீரமைத்த பிறகும் காமராசர் பெயரிலேயே இந்த மண்டபம் இருக்கிறது. அவர் திறந்து வைத்ததற்கான கல்வெட்டும் அப்படியே இருக்கிறது.
அரசியல் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் காமராசரை மதிப்பவன் நான், என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார் காமராசர். கருணாநிதி என் திருமண அழைப்பிதழை காமராசரிடம் கொடுத்தபோது ஸ்டாலின் சுறுசுறுப்பான இளைஞராக இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன், அவரது திருமணத்திற்கு நேரில் வர ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு உடல் நலம் இல்லையே என்றார். உடனே கருணாநிதி, நீங்கள் வருவதாக இருந்தால் திருமண மண்டபத்தையே மாற்ற தயாராக இருக்கிறேன் என்றார்.
அதன்படி காமராசரின் கார் மணமேடைவரை வருவதற்கு ஏற்றவாறு , ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட மண்டபத்தில் இல்லாமல், மாற்று மண்டபத்தில் எனக்கு திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார் என்ந் தெரிவித்தார். மேலும், பாரதிதாசன் கூறியபடி வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள் என வாழ்த்தி விடைபெறுகிறேன் என்று கூறினார்.
திருமண நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அமைச்சர் கே.என்.நேரு , சேகர்பாபு , மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சியின் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.