நீரை மாசுபடுத்தியவருக்கு நூதன தண்டனை... ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் விதித்தது...

குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் கழிவுநீரை விட்டு மாசு ஏற்படுத்திய நபருக்கு வித்தியாசமான முறையில் தீர்ப்பு வழங்கிய ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியின் தீர்ப்பின்படி குற்றவாளி பத்து பனை விதையை தண்டலம் குளக்கரையில் விதைத்தார்.

நீரை மாசுபடுத்தியவருக்கு நூதன தண்டனை... ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் விதித்தது...

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ளது கிருஷ்ணா கால்வாய். இந்த கால்வாய் வழியாக கிருஷ்ணா நதி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு  செல்கிறது.

இந்த கிருஷ்ணா கால்வாயில் எந்தவித அசுத்தங்களும் செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்ட நிலையில் செட்டி பேடு அருகே கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் லாரியிலிருந்து கழிவுநீரை இதில் விட்டுள்ளனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போது லாரியை சம்பவ இடத்திலேயே பிடித்து அதன் ஓட்டுநர் திருவள்ளூரை சேர்ந்த அன்பு என்பவரை கைது செய்து வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில்   நடைபெற்றது. இதில்  ஓட்டுனர் அன்பு இச்செயலை செய்தது உறுதியானது. அதனடிப்படையில் இவருக்கு அபராதமாக ரூபாய் 1200 விதிக்கப்பட்டும்,  ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் ஏதாவது ஒரு ஏரியில் 10 பனை மர   விதைகளை நட வேண்டுமெனவும் இதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதிசெய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தத் தீர்ப்பின்படி ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்  முன்னிலையில் லாரி ஓட்டுனர் அன்பு இன்று தண்டலம் குளக்கரையில் 10 பனை மர விதைகளை நடவு செய்து தனக்கு கொடுத்த இந்த  தண்டனையை நிறைவேற்றினார்.