ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்காக புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை!

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் என ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்காக புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை!

ஆன்லைன் ரம்மி போன்ற இணையதளம் சார்ந்த விளையாட்டுகள் மூலம், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் பணத்தை இழப்பதுடன் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

பணமிழப்பு காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது. 

இந்த குழு 71 பக்க அறிக்கையினை தமிழக முதலமைச்சரிடம் வழங்கி உள்ளது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் திறன் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் உடல் நலம் இந்த விளையாட்டுக்களால் பாதிக்கப்படுவதாககவும்,  கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது இயலாத ஒன்று என்பதால், இந்திய அரசியல் சாசனம் 252 ஐ பயன்படுத்தி மத்திய அரசு தேசிய அளவில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தமிழக அரசு மேல்மறையீடு செய்யலாம் என்றும் நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.