தமிழகம் முழுவதும் புதிய நீதிமன்றங்கள் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் புதிய நீதிமன்றங்கள் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அவர், கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டையில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், உதகையில் இயங்கி வரும் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை பிரித்து தனியாக ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

போடி, வந்தவாசி, முசிறி, சீர்காழி, ஸ்ரீவைகுண்டம், கொடுமுடி, சங்கராபுரம் ஆகிய இடங்களில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், அணைக்கட்டு, மொடக்குறிச்சி, விராலிமலை, கீழ்பெண்ணாத்தூர், வத்திராயிருப்பு, கல்வராயன்மலை, குன்றத்தூர், கே.வி. குப்பம், வண்டலூர் ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவால் பதிவு செய்யப்படும் வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க ஒரு கூடுதல் நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், மரணமடைந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு நலநிதி வழங்குவதற்கான அரசு  மானியம் 8 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார்.