10 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை...!

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில், சட்டவிரோத ஊடுருவல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர்.

வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்து போலி அடையாள அட்டைகளுடன் வசிக்க வைத்து தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்காக பணியாற்ற வைப்பதாக தேசிய புலனாய்வு முகமை குற்றம்சாட்டியது.

அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, அசாம், மேற்குவங்கம், ஹரியானா, ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் படப்பை, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், மறைமலைநகர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தாம்பரம் அருகே உள்ள படப்பையில், போலி ஆதார் அடையாள அட்டையுடன் தங்கியிருந்த திரிபுராவை சேர்ந்த சகாபுதின் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல் புதுச்சேரியின் எல்லைபிள்ளை சாவடி பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான குடோனில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.