தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு.. நாளை மறுநாள் வேட்பு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு நாளை மறுநாள் வேட்பு  தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு.. நாளை மறுநாள் வேட்பு  தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜுலை 24 ஆம் தேதியுடன்  நிறைவடைகிறது.  இதையடுத்து  புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்  ஜுலை 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி  பெற ஆளும் பாஜக அதிக முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில் மத்திய பாஜக அரசுக்கு  நெருக்கடி கொடுக்கும் வகையில்  பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து  எதிர்கட்சிகள் திட்டமிட்டு தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர்.

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக நிற்க சரத்பவார், பரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ணன் காந்தி உள்ளிட்டோர் மறுப்பு  தெரிவித்த நிலையில் முன்னாள் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் குடியரசு தலைவர் வேட்பாளராக  சின்ஹா அறிவிக்கப்பட்டார்.

அதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் யார் என்ற  எதிர்பார்ப்பு  இருந்து வந்த நிலையில் பழங்குடியின பெண் திரௌபதி முர்மு  அறிவிக்கப்பட்டார். பாஜக நா்டாளுமன்ற குழு கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டதகா அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா  கூறினார்.

ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆளுநர் பதவி வகித்திருக்கிறார் முர்மு. மேலும் பழங்குடியினத்தில் இருந்து குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதல் பெண்மணி ஆவார்.

இந்த நிலையில் முர்முவின் சொந்த மாநிலமான ஒடிசாவில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அங்குள்ள பாஜக அலுவலத்தில் திரண்ட பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு  நாளை மறுநாள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மையான ஆதரவு இருப்பதால் முர்மு குடியரசு தலைவராக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.