கொச்சின் கடல் பகுதியில் மாயமான மீனவர்...! முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த குடும்பத்தினர்...!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விளாத்திகுளம் பகுதி மீனவர் கொச்சின் கடல் பகுதியில் மாயம் - கண்ணீருடன் தவிக்கும் குடும்பத்தினர்

கொச்சின் கடல் பகுதியில் மாயமான மீனவர்...! முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த குடும்பத்தினர்...!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்பவரின் மகன் எமில் லாரன்ஸ் (36). இவரது மனைவி மரிய புஷ்பம். இத்தம்பதியினருக்கு ரேச்சல் மற்றும் லியான் என்று 2 குழந்தைகள் உள்ளனர்.  எமில் லாரன்ஸ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 6 மாத காலமாக தருவைக்குளத்தைச் சேர்ந்த தனபால் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தங்கி மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் வழக்கம் போல் எமில் லாரன்ஸ் தருவைக்குளம் கடற்கரையிலிருந்து கடந்த 4 -ம் தேதி எமில் லாரன்ஸ் உட்பட 11 மீனவர்கள் தருவைகுளம் கடற்கரையிலிருந்து, விசைப்படகு மூலம் கேரள மாநிலம் கொச்சின் கடற்கரை பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் மீன் பிடித்துவிட்டு தருவைக்குளம் கடற்கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது  தருவைகுளம் கடற்கரையிலிருந்து சுமார் 260 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள கேரள மாநிலம் கொச்சின் கடற்கரைக்கு தெற்கில், எமில் லாரன்ஸ் எதிர்பாராத விதமாக தவறி கடலில் விழுந்து மாயமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகவலறிந்த கொச்சின் கடற்கரை போலீசார், எமில் லாரன்சை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் படகின் உரிமையாளர் தனபால் நேற்று, மீனவர் எமில் லாரன்ஸ் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் அவரது குடும்பம் மற்றும் அந்த கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் மீனவர் மாயம் தொடர்பாக சூரங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் சார்பில், கொச்சின் கடலில் மாயமானதாக கூறப்படும் எமில் லாரன்ஸின் ஆதார் அட்டையை மட்டும் வாங்கிக்கொண்டும், மேலும் அவர் கடலில் மாயமானது குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறியதாகவும், தற்போது வரை தகவல்கள் எதுவும் தரவில்லை என்றும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மீனவர் எமில் லாரன்ஸ் கடலில் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் மட்டுமே இதுவரை அதிகாரிகள் சார்பிலும், படகியின் உரிமையாளர் சார்பிலும் கூறப்பட்டுள்ளது தங்களுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்றும், ஏற்கனவே இதே போன்று 6 மாதத்திற்கும் முன்பும் கூட இக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் தருவவைக்குளத்தில் மீன்பிடிக்க சென்றபோது கடலில் மாயமான நிலையில் உயிரிழந்ததாகவும் இதனால் இது தொடர்கதையாகி வருகிறது என்றும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனி கவனம் செலுத்தி, கொச்சின் கடலில் மாயமான மீனவரை உயிருடன் மீட்க துரிதமாக நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என எமில் லாரன்ஸின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.