73 நாட்களுக்கு  பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முத்துமனோவின் உடல்...

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட   விசாரணைக் கைதி  முத்துமனோவின் உடல்  73 நாட்களுக்கு  பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

73 நாட்களுக்கு  பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முத்துமனோவின் உடல்...

திருநெல்வேலி மாவட்டம் வாகை குளத்தை சேர்ந்த முத்து மனோ என்பவர்  வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பின்னர நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  சிறையில் அடைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சக கைதிகளால்  முத்து மனோ கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இதையடுத்து  கொலைக்கு  காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்  உடலையும் வாங்க மறுத்து  போராட்டம் நடத்தியதுடன் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை  தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், முத்துமனோவின் உடலை  ஜுலை 2 ஆம் தேதிக்குள் பெற்று கொள்ள வேண்டும் என்று உறவினர்களுக்கு கெடு விதிக்கப்பட்டது. இந்த நிலையில்   73 நாட்களுக்கு  பிறகு  முத்து மனோவின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர். 

இதையொட்டி  திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றிலும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  மேலும் அசம்பாவிதத்தை தவிர்க்க  வாகைகுளம் செல்லும் நெடுஞ்சாலைகளிலும்  போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னதாக கைதி  முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.