"கச்சத்தீவு மீட்பு; ஆலோசித்து நடவடிக்கை" எல்.முருகன் நம்பிக்கை!

"கச்சத்தீவு மீட்பு; ஆலோசித்து நடவடிக்கை" எல்.முருகன் நம்பிக்கை!

கச்சத்தீவை மீட்பது குறித்து நிர்வாக ரீதியாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை  தெரிவித்துள்ளார் .

இந்திய கடலோர கிராமங்களை ஆய்வு செய்யும் விதமாக மத்திய மீன்வளத்துறை சார்பில் " சாகர் பரிக்ரமா " என்ற கடலோர யாத்திரை பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் யாத்திரை பயணம் செய்ய வந்த மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மத்திய  இணையமைச்சர் எல்.முருகன், மத்திய அரசு மீனவர்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து  ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  ரூ.60 லட்சம் மானியத்துடன் தலா ரூ.1.30 கோடி மதிப்பிலான 50 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு விவகாரத்தை பொறுத்தவரை அதனை தாரைவார்த்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.  இந்த விசயத்தில் மத்திய அரசு கலந்தாலோசித்து  உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் மீன்வளம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை புறக்கணித்த சூழ்நிலையிலும், மீனவர்களின் நலனுக்காக இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 2014 வரை தமிழக மீனவர்கள் மீது தினமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஏராளமான மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், 2014-க்கு பிறகு  மீனவர்கள் மீது ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் கூட நடைபெறவில்லை. அதற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்த ராஜாங்க நடவடிக்கைகளே காரணம் என்றார்.
சில நேரங்களில் எல்கை தாண்டி  போகும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதையெல்லாம் தடுப்பதற்கு தான் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்து வருகிறோம் எனக் கூறினார்.

மேலும்,மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருப்பதற்காக ஜிபிஎஸ் கருவிகளை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்  மீனவர்கள் எல்லை தாண்ட வேண்டாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: இந்தியா கூட்டணி; பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு!