போலி மின்னஞ்சல் தயாரித்து பண மோசடி... ஐ.ஐ.டி. மாணவர் மீது புகார்...

தெரிந்தவர்களின் பெயரில் போலி மின்னஞ்சல் தயாரித்து அதன் மூலம் கிப்ட் கூப்பனாக 25 ஆயிரம் ரூபாய் வரை பெற்ற மோசடி நபர் மீது ஐ.ஐ.டி மாணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலி மின்னஞ்சல் தயாரித்து பண மோசடி... ஐ.ஐ.டி. மாணவர் மீது புகார்...
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள ஐ.ஐ.டி விடுதியில் தங்கி பையோடெக் பிரிவில் பி.எச்.டி படித்து வருபவர்  ராஜானி(31). கடந்த 21 ஆம் தேதி ராஜானியின் மின்னஞ்சலுக்கு அவரது பேராசிரியரான  சஞ்சிப் சேனாதிபதி என்ற பெயரில் மின்னஞ்சல் வந்தது. அதில் அவசரமாக தனக்கு கிப்ட் கூபன் உடனடியாக வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
 
தனது பேராசிரியர் தானே கேட்கிறார் என்று இதனை நம்பிய ராஜானி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து கிப்ட் கூபனை வாங்கி அனுப்பியுள்ளார். பின்னர் இதே போல் தொடர்ந்து 4 முறை கிப்ட் கூபன் கேட்டதால் ராஜானி 25 ஆயிரம் ரூபாய் வரை கிப்ட் கூபனை அனுப்பியுள்ளார்.
 
மீண்டும் கிப்ட் கூபனை மின்னஞ்சல் மூலமே கேட்டதால் சந்தேகமடைந்த ராஜானி பேராசிரியரான  சஞ்சிப்-பை தொடர்புகொண்டு பேசியபோது தான் எந்த கிப்ட் கூபனையும் கேட்கவில்லை என அவர் கூறியதால் தான் ஏமாற்றப்பட்டதை ராஜானி உணர்ந்து உடனடியாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பேராசிரியர் மின்னஞ்சல் போல் போலி மின்னஞ்சல் முகவரி தயாரித்து அதன் மூலமாக ராஜானியிடம் கிப்ட் கூபன் கேட்டது தெரியவந்துள்ளது. இந்த செயலைச் செய்த மர்ம ஆசாமி யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.