எதிரி ஒரு அடி எடுத்து வச்சா, நாம இரண்டு அடி எடுத்து வைக்கணும்... அமைச்சர் செந்தில் பாலாஜியின் அசத்தல் பேச்சு...

‘தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை  தவிர மற்ற அனைவரும்  தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

எதிரி ஒரு அடி எடுத்து வச்சா, நாம இரண்டு அடி எடுத்து வைக்கணும்... அமைச்சர் செந்தில் பாலாஜியின் அசத்தல் பேச்சு...

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துக்  கொண்டிருக்கின்றன. இந்தமாத இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவல்கள் வந்துள்ளன. ஊரக உள்ளட்சித் தேர்தலில் அமோக வெற்றியை பெற்ற தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அந்த வெற்றியை பெற முழு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் நேற்று கோயம்புத்தூரில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுகவினரிடம் விருப்பமனு வாங்கும் நிகழ்வு மற்றும் செயற்குழு கூட்டம்  நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை  தவிர மற்ற அனைவரும்  தேர்தல் பணியாற்றிட வேண்டும். திமுகவை வெற்றி பெற வைப்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிர் வரிசையில் நின்று பிரச்சினை ஏற்படுத்தினால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நம்மை பார்த்து எதிரிகள் பயப்பட வேண்டும். எதிரிகள் என்ன செய்கின்றனர் என்பதை பார்த்து முணுமுணுப்பது சரியாக இருக்காது. 

வரும்  22ம் தேதி தமிழக  முதல்வர் மு.க ஸ்டாலின் கோயம்புத்தூரில் நல திட்ட நிகழ்வுகளில் பங்கேற்க வருகிறார். ஒரு லட்சம் பேர் திரண்டு முதல்வரை வரவேற்க வேண்டும். நாம  தான் ஆளுங்கட்சி. நம்முடைய முதல்வர் ஸ்டாலின். நம்மை கண்டுதான் எதிரிகள் பயப்படணும். அவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், நாம்  இரண்டு அடி எடுத்து வைக்கணும் என்று பேசி திமுக தொண்டர்களை அசர வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.