கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், முதலமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
செந்தில்பாலாஜி கைது குறித்து எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு விமர்சனங்களை செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈபிஎஸ்ஸின் ஊழல் முறைகேடுகளை பட்டியலிட்டு கடுமையாக சாடி பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை பட்டினாப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பேட்டி விரக்தியின் வெளிப்பாடு என்றார். ஈபிஎஸ்ஸை விமர்சிக்க திமுகவினருக்கு எந்த அருகதையும் இல்லை எனவும் சாடினார்.
இதையும் படிக்க : செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை!
மேலும், செந்தில் பாலாஜி வாக்கு மூலம் அளித்து மற்ற அமைச்சரை மாட்டி விடுவாரோ என்ற அச்சத்தில் தான் நள்ளிரவு முழுவதும் அமைச்சர்கள் மருத்துவமனையை சுற்றி சுற்றி வந்தார்களா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் பிடிஆர் கூறிய 30 ஆயிரம் கோடி ரூபாய் பணம் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் எனவும் கோரினார்.
திமுக ஊழல் கட்சி என்றும், ஊழலை பற்றி பேசுவதற்கு திமுகவினருக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் ஜெயகுமார் விமர்சித்தார். திமுக அமைச்சரவையில் உள்ள பாதி பேர் ஊழல்வாதிகள் என்றும் காட்டமாக கூறினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்தான் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசி வருவதாகவும் தெரிவித்த ஜெயக்குமார், கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.