சிண்டிகேட் கூட்டத்தை ஆளுநர் மாளிகையில் நடத்தலாமா? ஆளுநருக்கு பதில் அளித்த அமைச்சர்!

சிண்டிகேட் கூட்டத்தை ஆளுநர் மாளிகையில் நடத்தலாமா? ஆளுநருக்கு பதில் அளித்த அமைச்சர்!
Published on
Updated on
1 min read

பல்கலைக் கழகங்கள் தொடர்பான ஆளுநரின் புகாருக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி, சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக கூறுவதற்கு ஆளுநருக்கு என்ன தகுதியுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்றைய தினம் நடைபெற்ற அனைத்து பல்கலைக் கழக பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், உயர்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, பல்கலைக்கழக சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாகவும், பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் கூட்டங்கள் நடைபெறுவதில்லை எனவும் ஆளுநர் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பல்கலைக் கழகங்கள் தொடர்பான ஆளுநரின் புகாருக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இணை வேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சர் இல்லாமலேயே பல்வேறு கூட்டங்களை ஆளுநர் நடத்துவதாக குற்றம் சாட்டினார். உயர்கல்வி செயலாளரை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்பது சிரிப்பை வரவழைப்பதாக கூறிய அமைச்சர், தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் அரசியல் செய்ய ஆளுநர் நினைப்பதாக கூறினார். பல்கலைக் கழகங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், மீன்வளப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்தலாமா என்று கேள்வி எழுப்பிய பொன்முடி, சிண்டிகேட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக கூறுவதற்கு ஆளுநருக்கு என்ன தகுதியுள்ளது என்று கேள்வி எழுப்பினார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையே கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக கொண்டுவரப்பட்டது என்றும் கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com