இனி 5 அடி கரும்புகளையும் கொள்முதல்...அமைச்சர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!

இனி 5 அடி கரும்புகளையும் கொள்முதல்...அமைச்சர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக குறைந்தது 5 அடி உயரமுள்ள கரும்பையும் கொள்முதல் செய்யலாம் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 

ராமதாஸ் ட்விட்டர் பதிவு:

விவசாயிகளிடமிருந்து 6 அடிக்கும் குறைவான கரும்புகளை வாங்க வலியுறுத்தி பாமக நிறுவனர் இராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடமிருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிக்கிறது. 

6 அடி கொண்ட கரும்புகளை கொள்முதல் செய்ய உத்தரவு:

ஆனால், 6 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பதால் அதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. ஆனால், காலமும், சூழலும் இந்த விஷயத்தில் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

இதையும் படிக்க: 6 அடிக்கும் குறைவான கரும்புகளையும்...அரசு ஆணையிட வேண்டும்...ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்: 

6 அடி உயரத்திற்கும் குறைவான கரும்புகளை தோட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிடுகின்றனர்.  அவ்வாறு அகற்றப்படும் கரும்புகள் வீணாகி விடும். பொங்கலுக்கு இன்னும் 8 நாட்கள் இருப்பதால் அகற்றப்படும் கரும்புகளை சந்தையிலும் விற்க முடியாது.

கரும்பின் உயரம் சில காரணங்களால் குறைவது இயல்பு. இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை. அதனால் உழவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், 5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும்,  கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட வேண்டும்” இவ்வாறு ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தமிழக அரசை வலியுறுத்தி இருந்தார்.

5 அடி கரும்பையும் கொள்முதல் செய்ய அரசு உத்தரவு:

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக குறைந்தது 5 அடி உயரமுள்ள கரும்பையும் கொள்முதல் செய்யலாம் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 

விவசாயிகளிடமிருந்து 5 அடி உயரமுள்ள கரும்பை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது குறைந்தது 5 அடி உயரமுள்ள கரும்பையும் கொள்முதல் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.