
சென்னை குராம்பேட்டையில் உள்ள தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் புத்தாக்க கண்டுபிடிப்புகள் 2022-க்கான கண்காட்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் கண்காட்சியை தொடங்கி வைத்து புதிய கண்டுபிடிப்புக்கான மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த கண்காட்சியில் 24 ஸ்டால்கள் அரங்கேற்றப்பட்டன. ஒவ்வொரு ஸ்டால்களிலும் தனித்துவம் வாய்ந்த திறமைகளை வெளிப்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர். இதில் அமைச்சர், 59 புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாணவர்களுக்கு 59 லட்சம் பரிசு தொகையையும், அதற்கான அங்கீகாரத்தையும் கொடுத்து பாராட்டினார்.
தொடர்ந்து இதுகுறித்து பேசிய அமைச்சர் தா. மோ அன்பரசன்,
மாணவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற கண்காட்சிகள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாணவர்களை புதிய கண்டுபிடிப்பாளர்களாகவோ, தொழில் முனைவோர்களாகவோ உருவாக்க உதவி செய்கிறது. தொழில் முனைவோர் மேம்பாடு திட்டத்தின் கீழ் 30,794 இளைஞர்களுக்கு, 97 அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளையும், இதுவரை 3,27,000 இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 49 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு 3 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் போன்ற துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தமக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். 1540 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 49 தொழில் முனைவோர் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது எனவும், படித்து முடித்த இளைஞர்கள் அடுத்தவரிடம் வேலை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் மாணவர்கள் தங்களின் புதிய கண்டுபிடிப்பு மூலம் மற்றவர்களுக்கு வேலை தருகின்ற சூழலை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு கொடுக்கின்ற உதவியை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன் எனவும் உலகத்திலேயே தென்னிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தான் திறமையான மாணவர்கள் உள்ளார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.