ஒரே ஆண்டில் 3வது முறை உயர்வு : லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்த பால் விலை !!

தமிழகத்தில்  இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்கிறது. இந்த திடீர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒரே ஆண்டில் 3வது முறை உயர்வு : லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்த பால் விலை !!

தனியார் பால்

தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆவின் நிறுவனத்தின் பங்களிப்பு வெறும் 16 சதவீதம் மட்டுமே என்பதால், பொதுமக்களும், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிகம் சார்ந்த நிறுவனங்களும் தனியார் பாலினையே அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

2 முறை உயர்ந்த விலை

இதனால், அந்நிறுவனங்கள் தன்னிச்சையாக அடிக்கடி பால் விற்பனை விலையை உயர்த்துவதையும், கொள்முதல் விலையை குறைப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளன. அந்த வகையில், தனியார் நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி, மே மாதத்தில் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தின. அதனை தொடர்ந்து, 3வது முறையாக தனியார் பால் விற்பனை விலையை உயர்த்துகின்றன. 

ஒரே ஆண்டில் 3வது முறை

தனியார் பால் நிறுவனமான சீனிவாசா பால் நிறுவனம் நேற்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ள நிலையில், ஹட்சன் நிறுவனம் இன்று முதல் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இதனால், பால் சார்ந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் விலை உயரும் நிலை உள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர் நலச்சங்கம் தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான விலை உயர்வு அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.