மிக்ஜாம் புயல்; இயல்பு நிலைக்கு திரும்பிய பேருந்து போக்குவரத்து!

மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சென்னை மாநகரில் பேருந்து போக்குவரத்து சீரானது. 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தலைநகர் சென்னை வெள்ளக்காடாய் மாறியது. சாலைகள் வெள்ளத்தில் தத்தளித்ததால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மட்டுமே தொடர்ந்தது. 

தாம்பரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரிகள் நிரம்பி வழிந்த நிலையில், ரேடியல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் தாம்பரம், பல்லாவரம் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாமல் இருந்தது. பல இடங்களில் வெள்ள நீரில் சிக்கி பேருந்துகளும் பழுதாகியது.

இதையும் படிக்க : மழை நின்றும் தண்ணீர் வடியாததால், வடிகால்வாய்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் முழுமையாக வடிந்துவிட்ட நிலையில்,மாநகரப் பேருந்துகளின் இயக்கம் சீராகியுள்ளது. வழக்கமாக நாளொன்றுக்கு 2600 பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும் நிலையில், தற்போது தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வழக்கம்போல் பேருந்து சேவை அளிக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்து இயக்கம் சீரானதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.