தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்... சென்னையில் மட்டும் 1,600 சிறப்பு மையங்கள்... 

கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் இன்று 40 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்... சென்னையில் மட்டும் 1,600 சிறப்பு மையங்கள்... 

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும், தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் இன்று 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசி முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 லட்சம் மக்கள் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்த சிறப்பு முகாம்கள் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் இன்று ஆயிரத்து 600 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. 200 வார்டுகளுக்கும் தலா 8 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 8 முகாம்கள் 3 அணிகளாக செயல்படவுள்ளன. ஒரு அணி 400 தடுப்பூசிகளுடன் காலை முதல் மதியம் வரை ஒரு இடத்திலும், மதியம் முதல் மாலை வரை ஒரு இடத்திலும் செயல்படவுள்ளன. மற்ற இரண்டு அணிகள் தலா மூன்று இடங்களில் நடமாடும் முகாம்களாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.