இந்துக்கள், பிராமின்களை தாக்கி பேசுவதா? டுவிட்டரில் காரசார வாதம் செய்த மதுவந்தி!!

இந்துக்கள், பிராமின்களை தாக்கி பேசுவதா? டுவிட்டரில் காரசார வாதம் செய்த மதுவந்தி!!

இந்துக்கள், பிராமின்களை தாக்கி பேசுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என மதுவந்தி கோபம் காட்டியுள்ளார். 

சென்னை கேகே நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளி தான் நேற்று முதல் இணையத்தை கலக்கும் செய்தியாக வலம் வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றிய ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், ஆன்லைன் வகுப்பில் அறைநிர்வாணத்தில் வகுப்பு நடத்தியதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டே இதற்கு காரணம். இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளியின் டிரஸ்டி என்று கூறப்படும் ஒய்.ஜி மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி ஆகியோரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்த மதுவந்தி, தப்பு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என கூறியுள்ளார். அப்பள்ளியில் படித்தவர்களில் ஒருவர் தான் என்று கூறிய அவர், அங்கு கல்வியாளராக தான் இருப்பதில் தனக்கு எந்த அசிங்கமும் இல்லை என்றும், ஆசிரியர் இப்படி செய்துள்ளது தான் அசிங்கமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 

அதுமட்டுமல்லாது இந்துக்கள் மற்றும் பிராமின்களை தாக்கி பேசுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் டுவிட்டர் பேஸில் விவாதத்தில் இறங்கிய மதுவந்தியை, வறுத்தெடுத்த பெண் ஒருவர், ‘மதுவந்தி மேடம்.. உங்க பேரை சொல்லவே கூச்சமா இருக்கு.. ஒரு டீச்சர் இப்படி எல்லாம் பண்ணி வெச்சிருக்கார்.. அதையெல்லாம் கேட்கிறதை விட்டுட்டு, இங்கே வந்து உட்கார்ந்து பள்ளி நிறுவனத்தை தாக்கி பேசுகிறார்கள் என்று குறை சொல்றீங்களே, உங்களுக்கு வெக்கமாக இல்லை?’ என்று சாடினார்.

இதற்கு பதிலளித்த மதுவந்தி, ‘சம்பந்தப்பட்ட நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். நான் இந்த விவகாரம் தொடர்பாக வெட்கப்படுகிறேன். நான் படித்த பள்ளியின் பெயர் இப்படி ஆகி விட்டதே என்று வருத்தப்படுகிறேன். ஆனால் "இந்து, பிராமின்" என்று குறிப்பிட்டு குற்றம் சாட்டப்படுவதை நான் விரும்பவில்லை, வெறுக்கிறேன். ஒரு இந்துவாக, பிராமினாக இருப்பதற்கு நான் வெட்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.