மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு;60 மணி நேர விசாரணைக்கு பின் விடுவிப்பு...

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு;60 மணி நேர விசாரணைக்கு பின் விடுவிப்பு...

குக்கர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக உதகையைச் சேர்ந்த சுரேந்தர் 60 மணி நேர விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாளில் உயர்மட்ட விசாரணைக்கு மங்களூரில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

உதகையில் விசாரித்த நபருக்கு நேரில் ஆஜராக சம்மன் :

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சாரிக் என்பவருக்கு சிம் கார்ட் வாங்க ஆதார் கார்டை வழங்கிய உதகை அடுத்துள்ள குந்தசப்பை கிராமத்தை சார்ந்த சுரேந்தர் என்பவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.கடந்த இரண்டு நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு உதகையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து போலீசார் சுரேந்தரை விடுவித்துள்ளனர்.

பின்னர் விசாரணை முடியும் வரை அவரது செல்ஃபோன் தங்களிடமே இருக்கும் எனவும், வெளியூருக்கு எங்கும் செல்ல கூடாது எனவும் விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் உடனே வர வேண்டுமென போலீசார் அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.

குக்கர் குண்டுவெடிப்பு சம்பந்தமாக 60 மணி நேரத்திற்கு மேலாக சுரேந்தரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஓரிரு நாளில் உயர்மட்ட விசாரணைக்கு மங்களூரில் ஆஜராக வேண்டுமென சம்மன் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் சுரேந்தர் விசாரணைக்கு மங்களூருக்கு செல்ல உள்ளதாகவும் அங்கு முகமது சாரிக் என்பவரை நேரில் அடையாளம் காண்பித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.