மணப்பாறை பொன்னர் சங்கர் கோவில் மாசி விழா - வசதி செய்துதரக்கோரி முற்றுகை

மணப்பாறை பொன்னர் சங்கர் கோவில் மாசி விழா - வசதி செய்துதரக்கோரி முற்றுகை

மணப்பாறை அருகே வரலாற்று சிறப்பு மிக்க பொன்னர் - சங்கர் கோவில் மாசி பெருந்திருவிழா துவங்கியது.பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அறநிலையத்துறை அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

 திருச்சி மாவட்டம், மணப்பாறை சுற்றுப்புற பகுதிகளான வீரப்பூர், படுகளம், வளநாடு ஆகிய பகுதிகளில் வரலாற்று சிறப்பு மிக்க மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களான பொன்னர் - சங்கர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அண்ணன்மார் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்த வளநாட்டில்; முதல் விழாவாக கிளி பிடித்தல் விழாவுக்கு பின்னரே பொன்னர் – சங்கரின் மற்ற கோவில்கள் அமைந்துள்ள படுகளம், வீரப்பூரில் திருவிழாக்கள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் மாசி திருவிழா கடந்த 18 ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான கிளி பிடித்தல் விழா நாளை 26 ம்தேதி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், தாராபுரம், பல்லடம்,  நாமக்கல், சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, காங்கேயம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்துள்ளனர்.
 

மேலும் படிக்க | கழிவறையில் ஆண் குழந்தை உடல் மீட்பு..

 இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக கோவில் வளாகத்தில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் அறநிலையத்துறை சார்பில் பக்தர்களிமிருந்து வாழ்த்து கட்டணம் என்றொரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நபர் ஒன்றுக்கு 10, 25, 50, நூறு ரூபாய் என அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய்க்கு வசூல் ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனால் பக்தர்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதியும் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்படாத நிலையில் பக்தர்களிடமிருந்து பல்வேறு வகையில் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து வளநாடு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில்  பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்...அதிமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்பு!

வருடம் தோறும் வாழ்த்து கட்டணம் என்று கூறி பலலட்சம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இன்று வரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாத்தில்  ஈடுபட்டனர். கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் செயல் அலுவலர் வைரவன் உறுதி அளித்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். கோவில் மூலம் வரும் வருமானத்தை கோவிலில் வளர்ச்சி பணி மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்களின் திடீர் போராட்டத்தால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.