உடல்நலக்குறைவால் காலமான மதுரை ஆதினம் அருணகிரிநாதரின் உடல் நல்லடக்கம்...

உடல்நலக்குறைவால் காலமான மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்  உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடல்நலக்குறைவால் காலமான மதுரை ஆதினம் அருணகிரிநாதரின் உடல் நல்லடக்கம்...

திருஞானசம்பந்தரால் நிறுவப்பட்ட மதுரை சைவமடத்தின் 292வது  குருமகா சன்னிதானமாக திகழ்ந்த அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். உயிரிழந்த நிலையில், அவரது உடல் மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள ஆதின மடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

இந்நிலையில் மதுரை ஆதினத்தின் உடலுக்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னனி, மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், எஸ்டிபிஐ, மனித நேய மக்கள் கட்சி, நாம் தமிழர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து ஆதினத்தின் உடலுக்கு மீனாட்சியம்மன் கோவில் சார்பில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை ஆதினத்திற்கு சொந்தமான 4கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரால் அபிஷகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் அவரது உடல் பூப்பல்லக்கில் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் திருவாவடுதுறை ஆதினம், கோவை காமாட்சிபுரி ஆதினம், தருமபுர ஆதினம் மற்றும் குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளை வலம் வந்து பின்னர்  முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதீனத்துக்கு சொந்தமான இடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.