திமுக சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் எம்.எம். அப்துல்லா...

திமுக சார்பில் மாநிலங்களவையில் போட்டியிடும் எம்.எம். அப்துல்லா, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.    

திமுக சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் எம்.எம். அப்துல்லா...

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் உயிரிழந்ததையடுத்து காலியான மாநிலங்களவை பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் எம்.எம். அப்துல்லா அறிவிக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, 1993ஆம் ஆண்டிலிருந்து திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தவர். திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் இணை செயலாளராக உள்ள இவர் மாநிலங்களவைக்கு போட்டியிட திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் ,சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான  சீனிவாசனிடம் எம்.எம். அப்துல்லா, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி. ஆர். பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செப்டம்பர் 13 ஆம் தேதி காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், மாநிலங்களவை பதவிக்கு அதிமுக சார்பில் யாரும் அறிவிக்கப்படாதாலும் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.