தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய இந்த கடிதத்தை, டெல்லி சென்றுள்ள தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை  அலுவலகத்தில் சந்தித்து வழங்கினார். அதில், தமிழக டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பகுதிகள் அதிகரித்துள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளது. இதனால் அதற்கான உரம் தேவையும் அதிகரித்துள்ளதாகவும், ஆனால் மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான உரத்தை முழுமையாக வழங்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

குறிப்பாக அக்டோபர் மாதத்தில் யூரியாவின் தேவை  ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் எனவும், ஆனால் இதுவரை 61 ஆயிரத்து 384 மெட்ரிக் டன் யூரியா மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுதவிர டி.ஏ. பி. 10,601 மெட்ரிக் டன்னும், எம்.ஓ. பி. 10,250 மெட்ரிக் டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப் பிடப்பட்டுள்ளது. 

மேலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வழங்கப்பட வேண்டிய யூரியாவில் ஆயிரத்து 59 லட்சம் மெட்ரிக் டன் இதுவரை வழங்கப்படவில்லை எனவும், இதே காலகட்டத்தில்  டி.ஏ. பி 32 ஆயிரம் மெட்ரிக் டன் குறைவாகவே வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.   

எனவே தமிழகத்தின் உரத்தேவையை விட குறைவாகவே உரம் ஒதுக்கப்பட்டதால்,  தற்போது   உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குறிப் பிட்டுள்ளார். எனவே சம்பா சாகுபடியை கருத்தில் கொண்டு,  நடப்பு பருவத்தில் 125 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி என்ற இலக்கை அடையவும், விவசாயிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

அதேபோல ஏற்கனவே மத்திய அரசின் தொகுப் பிலிருந்து வழங்கப்படாமல் உள்ள உரங்களையும் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்போது பயிர் சாகுபடி நிலத்தின் அளவு  அதிகரித்துள்ளதால் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக தமிழகத்துக்கு கூடுதலாக 25,000 மெட்ரிக் டன் யூரியாவும், 10 ஆயிரம் மெட்ரிக் டன் எம்.ஓ. பி வழங்க வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர்  ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார்.