குறைந்த செலவில் இ - பைக் தயாரித்து அசத்திய விவசாயி

பொன்னமராவதி அருகே குறைந்த செலவில் இ - பைக்கை தயாரித்து, விவசாயி ஒருவர் அசத்தியுள்ளார்.

குறைந்த செலவில் இ - பைக் தயாரித்து அசத்திய விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஐடிஐ துறையில் எலக்ட்ரீசியன் படிப்பு முடித்து உள்ள சரவணன் தற்போது விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார்.  இதற்கிடையில் தனது படிப்பு திறமையை கொண்டு ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணிய சரவணன். தன் முயற்சியாக 48 வோல்ட் மின் சக்தி, 750 வாட் திறன் கொண்ட மோட்டாரை பயன்படுத்தி மின் சக்தியில் இயங்கும் இ-பைக்கை உருவாக்கியுள்ளார்.

இதில் ஃப்ரண்ட் அண்ட் ரிவர்ஸ் என்ற இயக்கத்தை பயன்படுத்தியுள்ளதாக கூறும் அவர், முதலில் பல தடங்கல்கள் ஏற்பட்டாலும், தவறுகளை கலைந்து இ-பைக்கை மெருகேற்றியுள்ளேன் என சாதித்த பெருமையுடன் கூறுகிறார் சரவணன். தொடர்ந்து பேசிய அவர், பொதுவாகவே வாகனங்களால் சுற்று சுழலில் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகவும், ஆகையால் சுற்றுச்சுழலை பாதிக்காத வகையில் மாசில்லா வாகனத்தை உருவாக்க திட்டமிட்டதாகவும், அதன் பயனாக தான் இந்த இ- பைக்கை உருவாக்கி உள்ளேன் என கூறினார்.

மேலும் விவசாய வேலை இல்லாத நாட்களில் பழைய இரும்பு கடைகளில் உதிரிபாகங்களை வாங்கி வந்து மின்சக்தியில் இயங்கும் பைக்கை வடிவமைத்ததாகவும், இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியை கொண்டு உருவாக்கியதாகவும் தெரிவித்த அவர், இந்த வாகனத்தை தயாரிக்க மொத்தமாக ரூ.25 ஆயிரம் மட்டுமே செலவான தாகவும் கூறினார்.

மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் 3 பேர் வரை பயணம் செய்யலாம் என்றும் தற்போது பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடிவதாகவும், அதனை 65 கிலோ மீட்டராக அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் விவசாயி சரவணன் தெரிவித்தார். 

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், விலை கட்டுக்குள் வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், இந்த நிலையை சமாளிக்கவே இந்த இ- பைக்கை உருவாகியுள்ளதாகவும் விவசாயி சரவணன் தெரிவித்தார். மேலும் இதற்கான மின்சாரத்தை சோலார் மூலம் தயாரிப்பதாகவும் கூறிய அவர், இ - பைக்கின் வரவேற்பை பொறுத்தே அடுத்தடுத்த முயற்சியில் ஈடுபட போவதாகவும் குறிப்பிட்டார். விவசாயியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.