தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரியா? - இபிஎஸ் கடும் எச்சரிக்கை...

தமிழகத்தில் லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரியா? - இபிஎஸ் கடும் எச்சரிக்கை...

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் தனியாரை நுழைய அனுமதித்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி லாட்டரி சீட்டு திட்டத்தை சீரழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

பல்வேறு கால கட்டங்களில் தனியார் லாட்டரியால் பணம் இழந்த பல அப்பாவிகள் தற்கொலை செய்து கொண்ட அவலமும் நிகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், ஒரே கையெழுத்தில், ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழகத்தில் ஒழித்த பெருமை, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவையே சேரும் என தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு ஏழை-எளிய மக்கள், பல ஆண்டுகளாக லாட்டரி அரக்கனின் பிடியில் இருந்து தப்பி நல்வாழ்வு வாழ்ந்து வருவதாகவும்,ஆனால், அரசுக்கு வருவாய் பெருக்கும் வழியாக, தற்போது லாட்டரி சீட்டை தி.மு.க. அரசு மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கூறியுள்ள அவர்,நாட்டை சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், அரசின் வருவாயை பெருக்க வேறு நல்ல வழிகளை தேட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா ஒழித்த லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டு வந்தால், தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும் என்றும் எனவே, லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர இந்த அரசு முயற்சிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.