மீன்வள மசோதா மீனவர்களை பாதிக்கும்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்...

மீனவர்களை பாதிக்கும் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்ய வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தி  உள்ளார்.

மீன்வள மசோதா மீனவர்களை பாதிக்கும்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்...
நாடாளுமன்றத்தின் நடப்பு  கூட்டத்தொடரில் இந்திய கடல்சார்  மீன்வள மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில்  உள்ளதால் அதனை பலரும் எதிர்த்து வருகின்றனர்.
 
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாமென்று  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மத்திய அரசின் கடல்சார் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
 
மசோதாவில்  உள்ள சில பிரிவுகளில்   மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல்,  சிறையில் அடைத்தல்,  மீனவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற உட்பிரிவுகள் பரவலான  எதிர்ப்பையும் அமைதியின்மையயையும் ஏற்படுத்தி  உள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், எனவே இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும்  அனைத்து  தரப்பு  மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப புதிய மசோதாவை  பின்னர் தாக்கல் செய்யலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.