தி.மு.க. பொறுப்பேற்ற 5 மாதங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

தி.மு.க. பொறுப்பேற்ற 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க. பொறுப்பேற்ற 5 மாதங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 மாதங்களாக வடமாநிலங்களை சேர்ந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோர், சர்வ சாதாரணமாக விமானத்தில் வந்திறங்கி, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வங்கி ஏ.டி.எம். கொள்ளை, செயின் பறிப்பு, ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் தி.மு.க. பிரமுகர்களும் காவல் துறையினர் மற்றும் அரசு ஊழியர்களை மிரட்டுவது, மணல் கடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி,

இதுபோன்ற சம்பவங்கள் தமிழக மக்களை பீதியில் ஆழ்த்துவதோடு மட்டுமல்லாமல் கொதிப்படைய வைத்துள்ளது என்றும், இந்த தி.மு.க. ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த அரசின் இயலாமையை உணர்ந்த ஆளுநர், தமிழக போலீஸ் டி.ஜி.பி.யை அழைத்து வழங்கிய அறிவுரைக்குப்பின், சுமார் 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடியல் பிறக்கும் என தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள், நாள்தோறும் விடிந்தால் என்ன தகாத சம்பவங்கள் தங்களை சுற்றி நடக்குமோ? என்ற பாதுகாப்பற்ற நிலையில் பீதியில் உறைந்துபோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆகவே, நாட்டில் பெருகி வரும் குற்றச் சம்பவங்களை ஒடுக்குவதும், கிரிமினல்களை அடக்குவதும், மக்களை சுதந்திரமாக பயமின்றி இயங்க வைப்பதும், காவல்துறையை தம் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரின் தலையாய கடமை என எடப்பாடி பழனிசாமி நினைவுபடுத்தியுள்ளார்.