மீண்டும் சிக்கலில் கே.சி.வீரமணி: வீட்டில் பின்புறத்தில் பதுக்கிவைத்திருந்த மணல் கண்டுபிடிப்பு...

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணியின் இல்லத்திற்குப் பின்புறம் காலி பகுதியில் சுமார் 275 யூனிட் மணல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான உரிய ஆவணங்கள் தற்போதைக்கு இல்லை என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது  

மீண்டும் சிக்கலில் கே.சி.வீரமணி: வீட்டில் பின்புறத்தில் பதுக்கிவைத்திருந்த மணல் கண்டுபிடிப்பு...

அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் எனத் தமிழ்நாடு, கர்நாடகாவில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செப்டம்பர் 16- ஆம் தேதி காலை முதல் மாலை 06.00 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ள நிலையில் அதில், இந்த சோதனையில் கணக்கில் வராத 36 லட்சத்து ஆயிரத்து 60 ரூபாயும், அமெரிக்க டாலர்கள் 1.80 லட்சம், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 ஆடம்பர கார்களும், 4 கிலோ 987 கிராம் தங்கமும், 47 கிராம் வைரமும், 7.2 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள் போன்றவற்றைக் கைப்பற்றப்பட்டது.

 கே. சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள கே. சி.வீரமணியின் இல்லத்திற்குப் பின்புறம் காலி பகுதியில் சுமார் 275 யூனிட் மணல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான உரிய ஆவணங்கள் தற்போதைக்கு இல்லை என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 275  யூனிட் மணல் தொடர்பாக கனிமவளத்துத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் நேற்று ஜோலார்பேட்டையில் உள்ள கே. சி.வீரமணியின் வீட்டுக்குச் சென்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத் துறை அதிகாரிகள், வீட்டின் பின்புறமாகக் குவிக்கப்பட்டிருந்த மணலை ஆய்வு செய்தனர்.

 ஆனால் அதில் லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்ட அளவைவிடக் கூடுதலாக மொத்தம் 550 ஒரு யூனிட் மணல் உள்ளது தெரியவந்தது. உயரமான அளவில் மணலை கொட்டாமல் தட்டையாகப் பரப்பி வைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. கே. சி.வீரமணியின் வீட்டுப் பகுதியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மணலின் சந்தை மதிப்பு 33 லட்சம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பில் இல்லாத பட்சத்தில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சட்டவிரோத மணல் பதுக்கல் பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.